வளங்களைக்கொண்டு வாழ்க்கையை மேம்படுத்துவோம்

எம்மைச்சூழ காணப்படும் வளங்களைக் கொண்டு அவற்றை உச்சமாகப் பயன்படுத்தி தொழில் துறைகளை வடிவமைப்பதாக எமது இலக்குகள் காணப்படவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்.

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக மக்களின் சிபாரிசுகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

ஒரு காலகட்டத்தில் அரசியல் தலைமைத்துவமும் அதிகாரிகளும் நினைப்பதை அல்லது வழங்குவதை மக்கள் அபிவிருத்தியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் இப்போது மக்களுக்கு எவ் விடயம் அபிவிருத்தியாக முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டுமோ அதனை அவர்கள் முன்மொழிந்து பெற்றுக்கொள்வதற்கான சரியான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. 

இதனை நாம் பொருத்தமான அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. காரணம் நாம் நமக்கான அபிவிருத்தியை தீர்மானிப்பவர்களாக சக்திமயப்படுத்தப்பட்டிருக்கின்றோம். 

எங்களின் தேவைகள் எல்லாவற்றையும்  நாம் அபிவிருத்திக்கான அடிப்படைகளாகக் கருதிவிடக்கூடாது. நீங்கள் அரச முதலீட்டின் வாயிலாக ஒரு திட்டத்தை நிறைவேற்றுகின்றீர்கள் என்றால் அதற்குள் முக்கியமாக உங்கள் பகுதியில் காணப்படும் வளங்கள் பயன்பாடுடையதாகின்றதா? சுற்றாடல் பாதுகாக்கப்படுகின்றதா? நீங்கள் முன்மொழிந்த அபிவிருத்திகள் வாயிலாக எதிர்காலத்தில் இந்தக் கிராமத்தில் என்ன முன்னேற்றம் ஏற்படுகின்றது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். 

 எம் முன் உள்ள அபவிருத்திக்கான சவால்களில் கிராமம் தோறும் காணப்படும் வளங்களை நாம் உரியவாறு பயன்படுத்தத் தவறி வருகின்றமை எம்மைப் பாதிக்கின்றது. இருப்பதைக்கொண்டு ஒரு கிராமமாக, ஒருபிரதேசமாக நாம் எவ்வாறு முன்னேறலாம் எனச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.  

எம்மைச் சுற்றி பல்வேறு கருமங்களை ஆற்றத்தக்க அரச நிர்வாகம் உள்ளது. இவ்வாறான நிலையில் நாம் சகல சூழ்நிலைகளையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதுபோன்று அதிகாரிகள் உத்தியோகத்தர்களும் தமது பணியை மக்கள் மீண்டெழவேண்டும் என்ற இலட்சியத்துடன் புரிய வேண்டும்-என்றார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment