இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான திட்டத்திற்கு நோர்வே அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இலங்கைக்கான நோர்வே தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் 43 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளமையால் நோர்வே கவலையடைகிறது.
டிசம்பர் 2018இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மரண தண்டனையை நிறுத்திவைக்கும் செயற்பாட்டிற்கு ஆதரவளித்த 120 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதென்பது இலங்கையின் சர்வதேச மதிப்பையும், மனித உரிமைகள் செயற்பாடுகளையும் பாதிக்கும் செயலாகும்.
கொள்கை ரீதியில் அனைத்து வகையான மரண தண்டனையையும் நோர்வே கடுமையாக எதிர்க்கின்றது. அனைத்து குடிமக்களினதும் மனித உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அனைத்து நாடுகளினதும் கடமை என நோர்வே நம்புகிறது.
இலங்கை அரசுடன் அதி உயர்ந்த மட்டத்தில் மரண தண்டனை தொடர்பான கவலையை நோர்வே தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையை மீண்டும் மரண தண்டனையை அறிமுகம் செய்வதை கைவிடுமாறு நோர்வே கேட்டுக்கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment