கடந்த வாரம் இரத்து செய்யப்பட்டிருந்த அமைச்சரவைக் கூட்டம் கடும் சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் கூடுகின்றது.
இந்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.
தஜிகிஸ்தானில் இடம்பெற்ற மாநாட்டுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, நேற்று முன்தினம் நாடு திரும்பியவுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அமைச்சர்கள் சிலருடன் உரையாடியுள்ளார். இதன்போதே இன்று அமைச்சரவைக் கூட்டம் தனது தலைமையில் நடைபெறும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் 5 தடவைகள் கூடியுள்ளன.
இந்நிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் பல உண்மைகள் கசிந்துள்ளன.
ஜனாதிபதி குறித்தும் பல உண்மைகள் வெளிவந்ததையடுத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அத்தோடு அவசரமாக கடந்த 7ஆம் திகதி இரவு அமைச்சரவையைக் கூட்டிய ஜனாதிபதி, தெரிவுக்குழு முன்னிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் சாட்சியம் வழங்குவதால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகின்றது. எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தும்வரை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தமாட்டேன் என்று அமைச்சர்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் இதனையடுத்தும் தெரிவுக்குழு கூடியிருந்தது. அதன் காரமணமாக ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்திருந்தார். இதனையடுத்து, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருக்கவில்லை.
இதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment