தமிழர்களுக்கு கல்முனையில் வரலாறு இல்லை என்றால் கல்முனைக்கே வரலாறு இருக்காது என கல்முனை பிரதேச சபை உறுப்பினர் லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில், அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்குமாறு கோரி இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆய்வுகளின்படி 140 ஆண்டுகளே கல்முனையில் முஸ்லிம்களுக்கான வரலாறு உள்ளது என்பதுடன் அவர்களின் கடற்கரைப் பள்ளிகளும் 140 ஆண்டுகளுக்குட்ட வரலாற்றையே கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள லிங்கேஸ்வரன், ஆனால் கல்முனையில் உள்ள கோயில்களின் வரலாறுகள் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகவே உள்ளதாக குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“ஆங்கிலேயர் ஆட்சியில் வன்னியர்களின் பரம்பரையில் 7 தலைமுறையினர் கல்முனையில் வாழ்ந்துள்ளார்கள். இந்த நிலையில் தமிழர்களுக்கே வரலாறு இல்லையென்றால் கல்முனைக்கே வரலாறு கிடையாது.
1966ஆம் ஆண்டு சாயந்தமருதில் வைத்து மம்முறு போன்ற அரசியல் கைக்கூலிகளால், தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் பாண்டிருப்பில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில், தமிழர்களுக்குத் தீர்வு வரும்போதெல்லாம் காத்தான் குடியில் இடம்பெற்ற கொலை தொடர்பாக கதைக்கிறார்கள்.
ஆனால், காத்தான்குடி சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வீரமுனை பிள்ளையார் கோயிலில் தமிழ் பெண்கள் எத்தனையோ பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எவரும் கதைப்பதில்லை.
இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்முனை வரலாற்றை மாற்ற நினைப்பதும், காத்தான்குடி சம்பவம் பற்றிப் பேசுவதையும், தமிழரின் வரலாறு தெரியாமல் பேசுவதையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
கல்முனையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு ஒரு வரலாறு இருக்கின்றது எனவும், தமிழ் மக்களுக்கு அவ்வாறு வரலாறு எதுவும் கிடையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லிங்கேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
0 comments:
Post a Comment