வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவு செய்யப்படாத காணிகளை பதிவு செய்யுமாறும் அவ்வாறு பதிவு செய்யப்படாத காணிகள் அல்லது உரிமம் கோரப்படாத காணிகளை சுவீகரிக்கப் போவதாக பிரதேச சபைத் தவிசாளர் க. தர்சன் தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்டதும் ஜே-190 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளதும், உடுவில் உப அலுவலக எல்லைக்குட்பட்டதும், புகையிரத வீதிக்கு கிழக்குப் பக்கமாகவும் உள்ள பதிவுசெய்யப்படாது காணப்படும் காணிகள் 03.08.2019 அன்று பதிவுசெய்யப்படவுள்ளன.
அதன் அடிப்படையில் பூதவராயர் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் விளாத்தியடி வீதி என்பவற்றில், உடுவில் உப அலுவலக ஆதனப் பதிவேட்டில் பதிவுசெய்யப்படாது காணப்படும் ஆதனங்களை பதிவேட்டில் பதிவுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்குறிப்பிட்ட வீதிகளில் உள்ள காணிகளின் சொந்தக்காரர்கள் அனைவரும் தங்கள் காணிகளின் உறுதி, காணி வரைபடம், மற்றும் அவற்றிற்கான தோம்புகள் அனைத்தையும் தமது கைவசம் வைத்துக்கொண்டு 03.08.2019 ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் தங்களது காணிகளில் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அவ்வாறு காணிகளுக்குச் சமூகமளிக்காது பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காதுவிடும் காணி உரிமையாளர்கள் அனைவரதும் காணிகள் பிரதேச சபையினால் கையேற்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது தொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள உடுவில் உப அலுவலக பொறுப்பதிகாரியுடன், அலுவலக நேரத்தில் (உடுவில் உப அலுவலகம் - 021 224 4310) தொடர்பு கொள்ளுமாறும் பிரதேச சபைத் தவிசாளர் கேட்டுள்ளார்.-என்றுள்ளது.
0 comments:
Post a Comment