பாடசாலை மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் திட்டம் ஆரம்பம்

ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் காலையில் பசும் பால் பக்கற் ஒன்று வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
2025ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கத்துடனுமான இந்தத் திட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) இரத்தினபுரி, கலவான, கஜூகஸ்வத்த, சாஸ்திரோதய வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வுக்கு அப்பிரதேசத்தின் 13 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், இத்துடன் இணைந்ததாக கலவான பிரதேசத்தின் பாற் பண்ணையாளர்களுக்கு பல நன்மைகளை பெற்றுத் தருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய “பால் நிறைந்த தேசம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி செயலகம் மற்றும் கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி அமைச்சு மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சு இதற்கு பங்களிப்பு அளிக்கின்றது.
இந்நிகழ்ச்சியின் முதலாம் கட்டமாக தரம் ஒன்று முதல் ஐந்து வரையிலான 4 இலட்சம் மாணவ மாணவிகளுக்கு தினசரி 150 மில்லி லீற்றர் பசும் பால் வழங்கி வைப்பதுடன், சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய சுவையூட்டப்பட்ட பாலுக்குப் பதிலாக தரம் உறுதி செய்யப்பட்ட திரவப் பால் பக்கற் ஒன்று வழங்கிவைக்கப்படும். இதற்காக வருடத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்வதும் பசும்பால் பயன்பாட்டை நாட்டு மக்களுக்கு பழக்கப்படுத்துவதும் இலங்கையில் பசும் பால் உற்பத்தியை மேம்படுத்துவதும் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் செலவழிக்கப்படும் 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவை குறைப்பதும் இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
பாற் பண்ணையாளர்களை வலுவடையச் செய்வது பால் நிறைந்த தேசம் நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாவதுடன், இந்த நிகழ்ச்சியுடன் இணைந்ததாக 332 பிரதேச செயலக பிரிவுகளிலும் பால் கிராமங்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டமும் கிராமசக்தியினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment