அலகாபாத் ஐகோர்ட் வாசலில் பா.ஜ., எம்எல்ஏ., மகள், அவரது கணவருடன் துப்பாக்கிமுனையில் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி., பா.ஜ., எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்ஷி மிஸ்ரா. தலித் இளைஞரான அஜிதேஷ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கும் எம்எல்ஏ., தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி ஜூலை 4 அன்று, புகழ்பெற்ற ராம் ஜானகி கோயிலில் தனது காதலவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சாக்ஷி, தனது தந்தை தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து இருவரும் தலைமறைவாக இருந்தனர். இவர்களின் நிலைமை என்ன என தெரியாததால், இருவரையும் கண்டுபிடித்து தரும்படி அஜிதேசின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி சாக்ஷி மற்றும் அஜிதேஷ் சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வருகிறது. அதனால் கோர்ட் வாசலில் காத்திருந்த புதுமண தம்பதியை, காலை 8.30 மணியளவில் கருப்பு நிற காரில் வந்தவர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக்ரா பதிவெண் கொண்ட அந்த காரில், 'சேர்மேன்' (தலைவர்) என எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
எம்எல்ஏ., மகள், கணவருடன் கடத்தப்பட்ட சம்பவம் வெளியில் கசிந்ததால், பத்திரிக்கையாளர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, தம்பதி மீட்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் கடத்தல்காரர்கள் தப்பி விட்டதாகவும், அவர்களை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக கூறி உள்ளனர்.
இது பற்றி எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ராவிடம் கேட்ட போது, அவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் சுதந்திரம் அவருக்கு உள்ளது. நான் மிரட்டல் ஏதும் விடுக்கவில்லை. கணவன் - மனைவி இருவருக்கு இடையேயான வயது வித்தியாசம் மற்றும் அவருக்கு சரியான வேலை ஏதும் இல்லாதது குறித்து தான் நான் கவலை தெரிவித்தேன் என்றார்.
எம்எல்ஏ., மகள் காதல் சர்ச்சையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது, கடத்தல் ஆகியன தொடர்பாக பா.ஜ., இதுவரை வாய்திறக்காமல் மவுனம் காத்து வருகிறது.

0 comments:
Post a Comment