தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போதைப் பொருள் வியாபாரம் செய்துதான் போரை நடத்தினாரென்று ஜனாதிபதி பேசுவது சரியானதல்ல என வடகிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உண்மையான தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு மாதத்திற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மிகவும் கொள்கைப் பிடிப்பானவர், கொள்கையோடுதான் அவர் போராட்டம் நடத்தினார் என்று சொல்லியிருந்தார்.
எனினும், திடிரென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் போதைப் பொருள் வியாபாரம் செய்துதான் போரை நடத்தினார் என்று பேசுகிறார். இவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசும்போது ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
அவ்வாறில்லாமல், ஒரு நாட்டின் ஜனாதிபதி எழுந்தமானமாக பேசுவது சரியானதல்ல. மேலும் போராட்ட இயக்கங்களுக்கிடையில் போதைவஸ்த்து வியாபாரம் நடைபெற்றதா என்பது பற்றிய விளக்கங்களையோ அல்லது அப்படிப்பட்ட வரலாறுபற்றியோ இப்போது பேசுவது சரியானதல்ல.
இயக்கங்களைப் பொறுத்தவரையில் கடந்தகாலங்கள் எல்லாம் முடிந்த காலங்கள்.
ஆகையால் பல்வேறு இயக்கங்கள் தங்களது போராட்டங்களை நடத்துவதற்காக, பணத் தேவைக்காக, சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் பொதுவாக மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் பல்வேறு வகையிலும் பணங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.
ஒரு நாட்டின் ஜனாதிபதியானவர் எல்லாத் தகவல்களையும் பெற்றுக் கொள்ளும் அதிகாரமுடையவர். எல்லா உளவுத்துறையும் அவரிடம் இருக்கின்றது.
ஆகையினால் உண்மையான தரவுகள் இருந்தால் அந்த தகவல்களை அவர் உத்தியோக பூர்வமாக வெளியிடுவதுதான் அவர் சொல்கின்ற கூற்றினுடைய உண்மை, பொய்களை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமையும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment