கடந்த 2006ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி'. அநதப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 24ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன், கடந்த ஆண்டில் துவங்கினார். படத்தை, இயக்குநர் ஷங்கர் தயாரித்தார்.
படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் வடிவேலு மற்றும் படக் குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் படம் நின்று போனது. வடிவேலு ஒத்துழைப்புக் கொடுக்காததால், படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது; இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
அதையடுத்து, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. நேரில் வரவும் கோரியது. ஆனால், அதற்கு வடிவேலு மசியவில்லை. இதையடுத்து, நடிகர் வடிவேலுக்கு, படங்களில் நடிக்க வாய்மொழி உத்தரவாக ரெட்கார்டு போடப்பட்டது.
இதற்கிடையே, நடிகர் வடிவேலு அளித்த பேட்டியொன்றில், இயக்குநர் ஷங்கரைக் கடுமையாகத் திட்டி தீர்த்தார். இதையடுத்து, வடிவேலு மீது சட்டப்பூர்வ நடிவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது, இயக்குநர் ஷங்கர், வடிவேலு இடையே நிலவும் பிரச்னைக்கு முடிவு வந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.
தமிழ் திரையுலகின் முக்கியமான தயாரிப்பாளர் ஒருவர் இருவருக்குமான சிக்கலைத் தீர்த்து வைத்து விட்டதாக பேசுகின்றனர். இது குறித்து கோலிவுட் வட்டாரங்களில் கூறியதாவது:
முக்கியமான அந்த தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் வடிவேலுவிடம் மாறி மாறி பேசி, இருவரையும் சமாதானப்படுத்தி விட்டார். இதையடுத்து, சிக்கலுக்குரிய 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படம் கைவிடப்படும். இந்தப் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைப் போக்க, இயக்குநர் ஷங்கரின் அடுத்த இரு படங்களில் நடிகர் வடிவேலு, சம்பளம் எதுவும் இன்றி நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, புதிய படம் குறித்த அறிவிப்பை இருவரும் விரைவில் வெளியிடுவர்.
0 comments:
Post a Comment