கன்னியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட போராட்டக்காரர்கள்!

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்கு இன்று உணர்வெழுச்சியுடன் திரண்டு சென்ற தமிழ் மக்கள் ஆலயத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். தென்கயிலை ஆதீன சுவாமிகள் மீது சிங்களவர்கள் சுடுநீர் ஊற்றி அட்டகாசம் புரிந்தனர்.
இந்த அட்டூழியங்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸாரின் தடையையும் உடைத்துக் கொண்டு, ஆலயத்துக்குள் நுழையத் தமிழ் இளைஞர்கள் ஆக்ரோசமாக முயன்றபோதும், அவர்களை அமைதிப்படுத்தி, ஆலயத்துக்கு வெளியிலேயே வழிபாடு நடத்தப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலமான கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குகள் அடாத்தாக நுழைந்து விகாரை அமைத்துள்ளனர். பழைமை வாய்ந்த தமிழ் பௌத்த பல்கலைக்கழகத்தின் வரலாற்றைத் திரித்து, பௌத்த வழிபாட்டிடமாக உரிமை கோரி, அங்கு தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் தமிழர்களின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றார்கள்.
இந்தநிலையில், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தின் எஞ்சிய பகுதிகளையும் இடித்து விட்டு, பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்தன.
இதையடுத்து, தன்னெழுச்சியாக ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் இன்று கன்னியா நோக்கிச் செல்ல அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி பல பாகங்களிலிருந்தும் கன்னியா நோக்கித் தமிழர்கள் திரண்டிருந்தனர். அதிகமாக இளைஞர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
கன்னியா நோக்கிச் சென்றவர்களுக்கு அதிகபட்ச நெருக்குவாரங்களை இராணுவம், பொலிஸ் வழங்கியது. கன்னியாவுக்குச் செல்லும் பஸ்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அடிக்கொரு முறை மறிக்கப்பட்டது.
அனைவரும் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். முல்லைத்தீவிலிருந்து சென்ற பஸ் 8 இடங்களில் மறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
அந்த பஸ்ஸின் சில்லை கூரிய ஆயுதத்தால் ஓட்டையாக்கி, பயணத்தைத் தடை செய்ய முயன்றது இராணுவம்.
இந்தத் தடைகளைக் கடந்து தமிழ் மக்கள் கன்னியாவை நெருங்கியபோது, அங்கு கலகமடக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். கன்னியாவுக்குள் தமிழ் மக்கள் நுழைய தடைவிதித்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் தடையுத்தரவும் பொலிஸாரால் பெறப்பட்டிருந்தது.
தடையுத்தரவு காண்பிக்கப்பட்டு, மக்கள் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. கன்னியா சிங்களவர்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தளம் எனவும், தமிழர்கள் அதை ஆக்கிரமிக்க முயல்கின்றனர் எனவும் பொலிஸ் தரப்பால் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டே தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
ஆனால், கன்னியாவுக்குள் இருந்த சட்டவிரோத விகாரைக்குள் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் இன்று செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்குள் தமிழர்களை அனுமதிக்க முடியாது என்றதும், அதற்குத் தமிழ் இளைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க, அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.
இதையடுத்து, தென்கயிலை ஆதீன சுவாமிகள் மற்றும் கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தின் உரிமையாளரான பெண் ஆகியோரை மட்டும் உள்ளே சென்று பார்க்கப் பொலிஸார் அனுமதித்து, தமது பாதுகாப்பில் அழைத்துச் சென்றனர்.
இதன்போது, விகாரையிலிருந்த சிங்களவர்கள் கெட்ட வார்த்தைகளால் அவர்களைத் திட்டியதுடன், தென்கயிலை ஆதீனத்தின் மீது சுடுநீராலும் ஊற்றினர். இதுபற்றி பொலிஸ் அதிகாரிகளிடம் முறையிட்டபோதும், அட்டகாசம் புரிந்த சிங்களவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முறைப்பாடு பதிவு செய்வதெனில் நீங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுங்கள் எனப் பொலிஸார் அலட்சியமாக பதிலளித்தனர் எனவும் ஆதீன சுவாமிகள் விசனம் தெரிவித்தார்.
இந்தத் தகவலால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டு, தடைகளை உடைத்து ஆலயத்துக்குள் நுழைய எத்தனித்தபோது, தென்கயிலை ஆதீன சுவாமிகள் அவர்களை அமைதிப்படுத்தி, அந்தப் பகுதியிலேயே வழிபாட்டை நடத்தினார். அதற்குத் தமிழ் இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, ஆலயத்துக்குள் நுழைய வேண்டும் என்று வலியுறுத்த, வழிபாடு முடிந்ததாக அறிவித்துவிட்டு, தனது ஆதீனத்தை நோக்கிச் சென்று, ஊடகவியலாளர்கள் முன்பாக அறிக்கையொன்றை வாசித்தார் சுவாமிகள்.
அந்த அறிக்கையில்,
“கன்னியா வெந்நீருற்று, கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் ஆலயத்தின் வரலாறு கிழக்குவாழ் தமிழ் மக்களின் இருப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின இருப்புக்கும் மிக அவசியமானது. சிங்கள – பௌத்த அரசானது தமிழர் வரலாற்றை மகாவம்சமைய வரலாறாகத் திரிபுபடுத்த முயற்சிக்கின்றது. வரலாற்றியலை திரிபுபடுத்தல், புலமைசார் கற்கைநெறிகளின் ஊடாக முன்னெடுக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சிங்கள – பௌத்தமயமாக்கலில் சைவ ஆலயங்கள் பாதிக்கப்படுவது, ஏனைய மதத்தலங்களோடு ஒப்பிடுகையில், எல்லோருக்கும் தெரிந்ததரவு ரீதியல் நிறுவப்பட்ட உண்மை.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் மிகப் பாரிய அளவில் சிங்கள – பௌத்தமயமாக்கம் மிக வீரியமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது தொடர்பான எதிர்வினை, நேர்மறையான கூட்டுத் தந்திரோபாய நகர்வுகள் தமிழ் அரச தரப்பிலோ அல்லது தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் இடையேயோ இருப்பதாகத் தெரியவில்லை.
சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் மிகச் சிறிய எதிர்வினை முயற்சிகள் அடித்தள மக்களால் ஒழுங்கமைக்ப்பட்டு வருவதோடு இந்த எதிர்வினை நடவடிக்கைகள் பாரியளவில் தமிழ் மக்கள் அரசியல் உரிமை சார்ந்து மாற்றத்தைக் கொண்டு வந்ததா என்பதை ஆராய வேண்டிய தேவை உள்ளது கடந்த ஒரு தசாப்தமாக.
இவ்வாறான எதிர்வினைகளை ஒரு சமூக இயக்கமாக மாற்றுகின்ற தலைமைத்துவவெளி இன்னும் வெறுமையாகவே உள்ளது. சிங்கள – பௌத்த காலனித்துவத்துக்கு எதிரான நிறுவன மயமாக்கப்பட்ட தந்திரோபாய நகர்வுகள் கட்டமைக்கப்படும் வரை காலனித்துவம் இன்னும் அகலமாக விரிந்துகொண்டே போகும்.
இன்று கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயம். நாளை கோணேஸ்வரர் ஆலயமாகவும் இருக்கலாம். இந்த சிங்கள – பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை தமிழ் அரசியல் தலைமைகள் இல்லை என்று நிராகரிக்க முடியாது. இவ்வாறான சிங்கள – பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்கு எதிரான மாற்று வழியை தமிழ் அரசியல் தலைமைகள் முன்வைக்காதது அவர்களின் பொறுப்புக் கூறலிலிருந்து நழுவுவதாக அமையும்.
கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயம் தொடர்பில் பலதரப்பினரிடம் இது பற்றி கலந்துரையாடியுள்ளோம். அது பற்றிய குறுகிய, நீண்டகால விளைவுகள் பற்றியும் தமிழின இருப்பின் கேள்விக்குட்படுதல் பற்றியும் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால், இதுவரைக்கும் அசமந்தப்போக்குக் கடைப்பிடிக்கப்படுவது இது தொடர்பில் மத்தியஸ்தம் வகிப்பவர்களின் வகிபங்கை சந்தேகம்கொள்ளச் செய்கின்றது.
இனியும் இவ்வாறான நிலைமை தொடரும் என்றால் மக்கள் மயப்படுத்தப்பட்ட வன்முறையற்ற தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் மைய முன்னெடுப்புப் போராட்டங்கள் சிங்கள – பௌத்த காலனித்துவத்துக்குத் தீர்வாக அமையும் என்றால் அவற்றை ஒழுங்குபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறான போராட்ட முனைப்புக்கள் நாங்கள் வேறு இன மத மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதற்கு அப்பால் தமிழின இருப்பை உறுதிப்படுத்துவதோடு இலங்கையின் பல்லினத்தன்மையையும் தொடர்ந்து பேணுவதற்கு உறுதி செய்யும்.
இன்று கன்னியா நாளை எது என்று தெரியாமல் எதுவுமே நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மைக்குள் தமிழினம் வாழத்தள்ளப்படுகின்றது. சிங்கள – பௌத்த காலனித்துவம் இலங்கையில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை விரைவுபடுத்துகின்றது. இது தொடர்பில் பரந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டு தீர்வுகள் தொடர்பில் விரைந்துசெயற்பட ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழைத்து நிற்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment