2, 3 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்; ஏ.சி.சண்முகம் நம்பிக்கை

வேலூர் தேர்தலில் தான் 2, 3 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


வேலூர் மக்களவைத் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் இன்று  காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சத்துவாச்சாரியில் உள்ள தொகுதியில் வாக்களித்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில், வேலூர் தேர்தல் துரதிர்ஷ்டவசமாக நின்றது. பிறகு இப்போது விரைந்து அந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு ஜனநாயகக் கடமை இருக்கிறது. இந்தியக் குடிமகனாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் தன் நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் அரிய வாய்ப்பு.

இதில் அனைத்து மக்களும், வேலையை ஒரு மணிநேரம் ஒதுக்கிவிட்டு வாக்களிக்க வேண்டும். வேலூர் தொகுதி மக்கள் 90-100% வாக்களித்தனர் என்ற பெயரை எடுக்க வேண்டும். இது முன்மாதிரியான தொகுதி என்ற பெயரை எடுக்க வேண்டும். அனைவரும் வாக்களித்து விட்டனரா? என்பதைக் கூட்டணிக் கட்சியினர் சோதிக்க வேண்டும்.


2, 3 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். முன் நடந்த தேர்தல் முடிவை இது மாற்றும். மக்கள் எழுச்சியுடன் இருக்கின்றனர். கட்சியை மறந்துவிட்டு நல்ல வேட்பாளருக்கு வாக்களிப்பதாக மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இது நல்ல தேர்தல், மகிழ்ச்சியான தேர்தல்.

கடந்த 3, 4 மாதங்களாக நான் சிரமப்பட்ட தேர்தல். உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் போராடியதால், இத்தேர்தல் விரைவாக நடத்தப்படுகிறது. பிரதமரிடமும் இதற்காக கோரிக்கை அளித்திருந்தோம். அதற்காக பிரதமருக்கு நன்றி. முதல்வர், துணை முதல்வர் இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, மக்கள் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்திருக்கின்றனர்". இவ்வாறு ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment