கரூர் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் உள்ளது. நேற்று மதியம் கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி ஒருவரின் பெயருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதனை கோர்ட்டு ஊழியர்கள் பிரித்த பார்த்த போது, கடிதத்தில் எந்தவித பெயரும் குறிப்பிடாமல், நேற்று 5-ந்தேதி, இன்று 6-ந்தேதி ஆகிய 2 நாட்களில் கரூர் கோர்ட்டு வளாகத்தில் பிளாஸ்டிக் குண்டு வெடிக்கும்.


குண்டு வைக்கப்படும் இடத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் உடனடியாக கரூர் மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து எஸ்.பி. தலைமையிலான போலீசார் கரூர் கோர்ட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நேற்று மாலை முதல் இரவு வரை கோர்ட்டு வளாகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு துப்பறியும் நாய் ஹேண்டி மூலம் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் நவீன கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் எங்கேயும் வெடிகுண்டு சிக்கவில்லை.

இருப்பினும் இன்றும் வெடிகுண்டும் வெடிக்கும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததால், இரவு முழுவதும் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று காலை சோதனை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது. கோர்ட்டு நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், கோர்ட்டுக்கு வந்த ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்திய பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் கார்கள், இருசக்கர வாகனங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கோர்ட்டுக்கு வந்த ஊழியர்கள், பொது மக்கள் அனைவரும் ஒருவித பீதியுடனே காணப்பட்டனர்.

வெடிகுண்டு எதுவும் சிக்காததால் போலீசாரை அலைக்கழிக்க செய்யவும், கோர்ட்டு ஊழியர்களிடையே பீதியை உண்டாக்கும் வகையிலும் மர்ம நபர்கள் பெயர் எதுவும் குறிப்பிடாமல் மொட்டை கடிதத்தை கரூர் கோர்ட்டு நீதிபதிக்கு அனுப்பியுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்கள் யார்? எதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டனர் என்று தாந்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கரூர் கோர்ட்டு தீர்ப்பால் பாதிக்கப்பட்ட நபர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தின விழாவையொட்டி கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கரூர் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment