காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து, அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த திடீர் நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பான பேச்சாக மாறி இருக்கிறது. இது தொடர்பாக பேஸ்புக்- வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் இந்த துணிச்சலான தடாலடி அறிவிப்பை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். எதிர்ப்பும் வலுத்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து மாநில போலீசாரும் உஷார்படுத்தப்பட் டுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லியில் இருந்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்று நேற்று பிறப்பிக்கப்பட்டது. அதில், ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தேவையில்லாத வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எப்போதும் இதுபோன்று உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகளே தங்கள் பகுதியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வார்கள். போலீஸ் கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரே ஆலோசனை கூட்டங்களை நடத்தி பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வார்கள்.
கோவை விமானநிலையத்தில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.
இந்த வழக்கத்துக்கு மாறாக இப்போது மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க சிறப்பு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்று பிறப்பித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையால் தமிழ்நாட் டில் சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளாக 5 போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலம் மற்றும் கோவை, திருப்பூர், சேலம் பகுதிகளை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக சென்னை ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.யான சங்கர் ஜூவால் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் பகுதிகளை கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை விமான நிலையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாநகர பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் மத்திய மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக கூடுதல் டி.ஜி.பி. சைலேஸ் குமார் யாதவ், வடக்கு மண்டலம் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளை கண்காணிப்பதற்காக கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த 5 அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று உடனடியாக பொறுப்பேற்றுக் கொள்வதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி சிறப்பு போலீஸ் அதிகாரிகள் உடனடியாக தங்களது பணிகளை தொடங்கினர்.
கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தை போனில் தொடர்பு கொண்டு குமரி மாவட்ட நிலவரம் பற்றி கேட்டு அறிந்தார். அப்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆலோசனைகளை வழங்கினார்.
மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநவ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தென்மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்கள், பா.ஜனதா அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல அனைத்து சிறப்பு அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment