சபரிமலையில் பதட்டம் ; பெண்களைத் திருப்பி அனுப்பிய பொலிஸார்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்று  உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றின் இந்த உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

ஐயப்பனை தரிசிக்க இளம்பெண்கள் சென்றால் அவர்களை தடுப்போம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். 

இதற்கிடையே சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

கேரள அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டும் வருகிறார்கள். 

கடந்த சித்திரை ஆட்டத் திருநாள், ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறந்த நாள் மற்றும் மண்டல பூஜைக்கு நடை திறக்கப்பட்ட நாள்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  தலைமையில் 11 பெண்கள் நேற்று சபரிமலைக்குச் சென்றனர். பொலிஸ் பாதுகாப்புடன் மலையேறிய அவர்கள் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

பக்தர்கள் போராட்டத்தால் 11 பெண்களுக்கும் மலையேற முடியாத நிலை ஏற்பட்டது. பொலிஸாரும் பாதுகாப்பு அளிக்க முடியாது என கை விரித்ததால் 11 பெண்களும் ஐயப்பனை தரிசிக்காமலேயே திரும்பினர். 

சபரிமலையில் நேற்று சென்னை பெண்கள் ஏற்படுத்திய பரபரப்பு  முடியுமுன்பு இன்று கேரளாவைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் ஐயப்பனை தரிசிக்கச் சென்றனர். 

 பம்பை  பொலிஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் அப்பாச்சிமேடு வரை தடங்கலின்றி நடந்து சென்றனர். 

அப்பாச்சிமேடு சென்றதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் திடீரென அங்கு குவிந்தனர். அவர்கள் மலையேற முயன்ற இளம் பெண்கள் இருவரையும் இடைமறித்தனர். நாம ஜெப வழிபாடு நடத்தி பெண்களை திரும்பி செல்லும்படியும் கோ‌ஷமிட்டனர். 

காலையில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க, அவர்களை பொலிஸார் அப்புறப்படுத்தி பெண்களை சந்நிதானம் நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர். அப்பாச்சி மேட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்ததால் பெண்களை சந்நிதானம் அழைத்துச் செல்ல முடியாமல்  திணறிய பொலிஸார், இனியும் பெண்களை சந்நிதானம் அழைத்துச் செல்வது சாத்தியம் இல்லை திரும்பிச்செல்வதே நல்லது எனக் கூறினர். 

பெண்கள் இருவரும் இதனை ஏற்க  மறுத்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எங்களை 18 ஆம் படி ஏற்றி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை திரும்பிச் செல்ல மாட்டோம் என்று கூறினர். இதனால் சபரிமலையில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. 

இதையடுத்து தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அப்பச்சமேடு பகுதியில் உள்ள நிலவரத்தை அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். 

பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் இருவரையும் திருப்பி அனுப்பும்படி அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி  அவர்களை பொலிஸார் திருப்பி அனுப்பினர். 

இதனால் சபரிமலை செல்லும் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment