ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரண எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது.
இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை இடைவிடாது தொடர்வதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கை தொடர்பாகப் புதிய பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது.
பிரிட்டன் - ஜேர்மனி தலைமையில் கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்துள்ளன.
பிரிட்டன் எடுத்த முயற்சிகளுக்காக அந்த நாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் நன்றியும் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே இலங்கை தொடர்பாக 2015 இல் இலங்கையும் சேர்ந்து ஜெனிவாவில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை நிறைவேற்றுவதற்குத் திட்டவட்டமான காலவரையறைகளை விதிக்க வேண்டும் எனவும், புதிய பிரேரணையை இலங்கை நீர்த்துப் போக வைக்க இடமளிக்கக் கூடாது எனவும் கூட்டமைப்பு பிரிட்டன் தரப்பை வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரேரணையை நிறைவேற்றும்போது அதனை சமர்ப்பித்த நாடுகளும் இலங்கையும் உரையாற்றவுள்ளன.
தற்போதுவரை இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.
அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, இலங்கை , சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.
மேலும் பல நாடுகள் இணை அனுசரணைப் பட்டியலில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment