விமான நிலையத்தில் பிரசவம் பார்த்த பொலிஸ்

விமான நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பவதிக்கு, அங்கு பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாறிய சம்பவம் ஒன்று டுபாய் நாட்டில் நடந்துள்ளது.

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ்  உத்தியோகத்தர் கார்பரல் ஹனன் உசைன் முகமது என்பவர் சம்பவத்தன்று பணி முடிந்து  வீட்டுக்குச் செல்ல ஆயத்தமாகியுள்ளார்.

இதன்போது, அங்கு நின்றுகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், தனக்கு வயிறு  வலிப்பதாகக் கூறி உதவி கோரியுள்ளார்.

உடனே,  கார்பரல் ஹனன், அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவர் 6 மாதம் 5 நாள்கள் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

அவரது ஆடையில் ரத்தம் சிந்தியிருந்ததைப் பார்த்துப் பதறிப்போன  கார்பரல் ஹனன், உடனடியாக ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்தார்.

அடுத்ததாக, அங்குள்ள பரிசோதனை அறைக்கு அந்த கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் சென்று தரையில் படுக்க வைத்து அவருக்கு முதலுதவி செய்துள்ளார்.  அப்போது அவருக்கு பிரசவ வலி மேலும் அதிகரிக்க. கர்ப்பப் பையிலிருந்து குழந்தை வெளியேற ஆரம்பித்தது.

இனியும் தாமதித்தால் தாயின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கார்பரல் ஹனன், பிரசவம் பார்த்துள்ளார். தலை திரும்பிய நிலையில், கர்ப்பப் பையை விட்டு வெளியே வராமல் இருந்த குழந்தையை இலாவகமாக வெளியே எடுத்துள்ளார்.  

பின்னர்  அங்கு  வந்த  மருத்துவர்கள் தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதுபற்றி கார்பரல் ஹனன் கூறுகையில், “6 மாதத்திலேயே பிறந்த அந்த ஆண் குழந்தையை, கர்ப்பப் பையை விட்டு வெளியே எடுத்ததும் அழவில்லை, மூச்சும் விடவில்லை. ஏதோ பிரச்சினை இருப்பதை அறிந்த நான், உடனடியாக குழந்தையை காப்பாற்றுவதற்காக அவசர முதலுதவியை செய்தேன்.
முதலில் குழந்தையின் முதுகில் தட்டினேன், அப்போதும் அழவில்லை. 

பின்னர் குழந்தையின் மார்புக்கு சற்று அழுத்தம் கொடுத்து இதயத்துடிப்பை ஏற்படுத்த முயற்சி செய்தேன். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை அழத் தொடங்கியது. என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தையின் இனிமையான குரலைக் கேட்ட பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது” என்றார்.

சரியான நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு, தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது செயலைப் பாராட்டி டுபாய் பொலிஸ் சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment