நோட்ரே-டேம் தேவாலயத்தின் அரிய பொக்கிஷங்கள்

பிரான்சின் நோட்ரே-டேம் தேவாலயத்தில் நடந்த  தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் ஆன்மிகவாதிகளையும் தாண்டி, உலகம் முழுவதிலும் உள்ள கலை, வரலாற்று ஆர்வலர்களையும் வேதனை கொள்ள வைத்திருக்கிறது.

தேவாலயச் சீரமைப்புக்கான நிதியுதவி குவிகையில், அதை முன்பை விட அழகாக மறுசீரமைப்பு செய்யப் போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ராங் அறிவித்துள்ளார்.

தேவாலயத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக பாரீஸ் நகரின் துணை மேயர் இமானுவேல் கிரிகோரே தெரிவித்தார். அதன் உட்புற மர வேலைப்பாடுகள் அழிந்துவிட்டன.

எனினும், 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்திய இந்தக் கட்டடம், பாரீசின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக வேறு சில சிறப்பு அம்சங்களும் உள்ளன.

இந்தத் தேவாலயத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரும் கண்ணாடி ஜன்னல்கள் மூன்று இருந்தன. ரோஸ் சாளரங்கள் எனப்படும் அவை, தேவாலயத்தின் மிகவும் புகழ்மிக்க அம்சங்களில் ஒன்றாக இருந்தன.

மேற்குப் பகுதியில் இருந்த முதலாவதும், சிறியதுமான சாளரம் கி.பி. 1,225 வாக்கில் முடிக்கப்பட்டதாகும். கண்ணாடியைச் சுற்றி கற்கள் பதித்திருந்த வேலைப்பாட்டுக்காக அது சிறப்புப் பெற்றிருந்தது.

தெற்கு ரோஸ் சாளரம் சுமார் 13 மீட்டர் விட்டம் கொண்டது. 84 பேனல் களைக் கொண்டது. இருந்தபோதிலும், முன்பும் இதேபோன்று தீ விபத்துகளில் பாதிப்பு ஏற்பட்டதால், கண்ணாடியில் அதன் அசலான, பளபளப்பான தன்மை இல்லை.

தற்போது ரோஸ் சாளரங்களுக்கு தீயினால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், கட்டிடமே பாதிக்கப்பட்டிருப்பதால், இவற்றின் பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதாக கதீட்ரலின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரே பினோட் கூறுகிறார்.

நோட்ரே-டேமுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோதிக் காலத்து இரட்டை கோபுரப் பகுதியில் சிறிது நேரம் நிற்பார்கள். தேவாலயத்தின் மேற்குப் பகுதியில் கிரீடம் போல இந்தக் கோபுரங்கள் அமைந்துள்ளன.

மேற்கு முகப்புப் பகுதியில் கி.பி. 1200 இல் பணிகள் தொடங்கின. ஆனால் வடக்கில் உள்ள முதலாவது கோபுரம் 40 ஆண்டு கள் வரை முடிக்கப்படவில்லை. அதன்பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 1250 இல் தெற்கு கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

இரண்டு கோபுரங்களும் 68 மீட்டர் உயரம் கொண்டவை. 387 படிக்கட்டுகள் கொண்ட அந்தக் கோபுரத்தின் மீது ஏறினால் வானில் இருந்து பாரீஸ் நகரைப் பார்க்கும் காட்சிகள் கிடைக்கும்.
மணி கோபுரங்கள் இரண்டும் அப்படியே உறுதியுடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாரீஸ் நகரைக் காண்பதற்காக படிக்கட்டுகளில் ஏறிச் செல்பவர்கள் யாராக இருந்தாலும், தேவாலயத்தின் மற்றொரு சிறப்பு அம்சமான ‘மனித விலங்கு’ சிற்பத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

கற்பனையின் அடிப்படையிலான இந்த உருவம், ஒன்றுக்கும் மேற்பட்ட விலங்குகளின் உருவங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

‘ஸ்டிரிஜ் சிற்பம்’ எனப்படும் மிகப் புகழ்பெற்ற சிற்பம், கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்த நிலையில், தலையைக் கைகளில் தாங்கி, நகரைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் 10 மணிகள் உள்ளன. மிகப் பெரிய மணியின் பெயர், இமானுவேல் என்பதாகும். அது 23 டொன் எடை கொண்டது. தெற்குக் கோபுரத்தில் 1685 இல் அதை நிறுவியுள்ளனர். தேவாலயத்தின் 850 ஆவது ஆண்டு விழா 2013 இல் கொண்டாடப்பட்டபோது வடக்கு கோபுரத்தில் சிறிய மணிகள் அமைக்கப்பட்டன.

பிரெஞ்சுப் புரட்சியின்போது பீரங்கி குண்டுகளுக்காக உருக்கப்பட்ட அசல் மணிகளைப் போல உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மணிக்கும் ஒரு துறவியின் பெயர் சூட்டப்பட்டது.

1831 இல் ‘தி ஹன்ச்பேக் ஆப் நோட்ரே-டேம்’ என்ற தனது படைப்புக்காக இந்தத் தேவாலயத்தை மாதிரி அமைப்பாக எழுத்தாளர் விக்டர் ஹுகோ பயன் படுத்திக் கொண்டார்.
நோட்ரே-டேமின் புகழ்மிக்க உயர் கோபுரம் சமீபத்திய தீ விபத்தில் சரிந்துவிட்டது. இது 12 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தது.

இந்தக் கட்டிடத்தின் வரலாற்றில் இந்தக் கோபுரம் பல மாறுதல்களைச் சந்தித்துள்ளது. அவற்றில், பிரெஞ்சுப் புரட்சியின்போது இடிக்கப்பட்டு 1860-களில் மீண்டும் உருவாக்கப்பட்டதும் அடங்கும்.

சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு கிறிஸ்து அணிந்திருந் ததாகக் கருதப்படும் புனித முள் கிரீடம், சிலுவையின் ஒரு பகுதி மற்றும் ஓர் ஆணி ஆகிய நினைவுச்சின்னங்கள் நோட்ரே-டேமில் இருந்தன.

தேவாலயத்தின் உள்ளே உயரமான சுவர்களில் இருந்த பெரிய ஓவியங்கள் மிகவும் கனமாக இருந்ததால் அவற்றைப் பத்திரமாக பாதுகாத்து கீழே கொண்டு வருவது கடினமாக இருந்ததாக தீயணைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தேவாலயத்தில் மூன்று இசைக் கருவிகள் உள்ளன. அவற்றில், 8 ஆயிரம் குழல்கள் கொண்ட கிரேட் ஆர்கன் கருவியும் ஒன்று. 1401 இல் முதலில் அமைக்கப்பட்டு, 18 மற்றும் 19 ஆவது நூற்றாண்டுகளில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டது அது.

காலப்போக்கில் பல முறை புதுப்பித்தல் மற்றும் சேர்த்தல்கள் நடந்தபோதிலும், மத்திய காலகட்டத்தில் முதலில் அமைக்கப்பட்ட சில குழல்களும் அதில் உள்ளன.

இந்த இசைக் கருவி பாதிப்பில்லாமல் அப்படியே உள்ளது என்று பாரீஸ் துணை மேயர் கிரிகோரே கூறினார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment