இலங்கை தாக்குதல் இந்தியாவில் ஒருவர் கைது

இலங்கையில் நடத்தப்பட்ட  தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவருடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில் இந்தியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரியாஸ் அபூபக்கர் என்ற குறித்த சந்தேகநபர் கேரளாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கேரள நீதிமன்றம் ஒன்றில் சந்தேகநபர் இன்றையதினம் முன்நிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, கடந்த  21 ஆம் திகதி இலங்கையில், நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான் ஹாசிமிற்கு, இந்தியாவில் உள்ள தொடர்புகள் குறித்து அந்த நாட்டின் புலனாய்புப் பிரிவு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, தமிழகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாகவே, இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத்  தாக்குதல் குறித்த தகவல்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவு முற்கூட்டியே  இலங்கைக்கு வழங்கி இருந்தது.

சஹ்ரானின் அடிப்படைவாத கருத்துக்கள் அடங்கிய காணொளிகள் பல இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்துக் கொள்வதற்காகச் சென்ற இளைஞர்கள் சிலருடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

இதுதொடர்பான விசாரணைகளின் ஒரு கட்டமாக, சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.உடன் இணைந்துக் கொண்டதாக நம்பப்படுகின்ற  கேரள இளைஞர்கள் மூவரது இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய சூத்திரதாரியின் இந்தியத் தொடர்பு குறித்து பல்வேறு கோணங்களில் இந்திய தேசியப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.

இதற்கிடையே தமிழகத்திலும் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை நிலவுகின்ற நிலையில், முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரும், புலனாய்வுப் பிரிவினரும் எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரையோர பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு, விசேட கண்காணிப்பு படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment