தி.மு.க. பிரமுகரின் திகில் அனுபவம்

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பை நேரில் பார்த்த அனுபவத்தை தமிழகத்தின் திருப்பூர் தி.மு.க. பிரமுகர் செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

தேர்தல் வேலைகள் முடிந்த பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் அறுவர் சேர்ந்து இலங்கைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தோம்.

இதுவரை நான் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றதில்லை. ஆனால் எனது முதல் வெளிநாட்டு பயணமே திகில் அனுபவமாக அமைந்துவிட்டது.

கொழும்பு நகரில் கிங்ஸ்பரி நட்சத்திர விடுதியின் 7 ஆவது மாடியில் மூவரும், மீதம் உள்ள மூவர் 6 ஆவது மாடி  அறையிலும் தங்கியிருந்தோம்.

21 ஆம் திகதி காலை எழுந்து குளித்து முடித்து விட்டு காலை உணவு சாப்பிடுவதற்காக கீழ் தளத்திற்கு செல்வதற்குத் தயாராக இருந்தோம்.

காலை 8.45 மணி அளவில் விடுதியின் கீழ்த்தளத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த விடுதியின் கட்டடமே குலுங்கியது. குண்டு வெடித்ததில் நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீர் பல அடி உயரத்துக்கு மேலே எழும்பியதைப் பார்த்து சுனாமி வந்துவிட்டது என்று நினைத்தோம்.

கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து நாலா புறமும் ஓடினார்கள். அதன்பிறகு விடுதி ஊழியர்கள் அறைக்கு வந்து எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்துச் சென்றனர்.

சாப்பிடுவதற்காக கீழ்த்தளம் செல்லவிருந்த நேரத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்தது. மயிரிழையில் நாங்கள் உயிர் தப்பினோம். எங்கு செல்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. பீதியில் 6 பேரும் உறைந்து போனோம்.

அதன்பின்னர் தாஜ் விடுதிக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். இதற்கிடையில் எனக்கு காயச்சல் வந்துவிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு செவிலியர்கள் வாயிலாக இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பை நடந்ததை அறிந்துகொண்டேன்.

நாங்கள் 23 ஆம் திகதி இலங்கையிலிருந்து கிளம்பி மதியம் 2.45 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தோம். கோவை மண்ணை மிதித்த பின்னர் தான் எனக்கு உயிரே வந்தது. எனது வாழ்நாளில் மறக்க முடியாத திகில் அனுபவம் இதுவாகும் எனக் கூறியுள்ளார்.

எங்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த இலங்கை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment