கொழும்பு மற்றும் ஏனைய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளையும் கொலைகளையும் கண்டிக்கிறேன். மக்களும் மதங்களும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் ஏறபடுத்த வேண்டும்
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கிறிஸ்தவ மக்களுக்கு இயேசுவின் உயிர்ப்புக் கொண்டாட்டம் ஒரு முக்கியமானதாகும். இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்துத் தற்கொலை தாரிகளால் சில இடங்களிலும் வேறு இடங்களில் மர்மமான முறையிலும் பாரிய குண்டு வெடிப்புக்கள் நடந்தமைக்கு நாம் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இந்த செய்கைகள் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கொடிய மனித குலத்துக்கு எதிரான செயலாகும். கிறிஸ்தவ மதத்தவருக்கு எதிரான கொடிய செயலாகும். உடனடியாக அரசு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி மக்களை பாதுகாக்கவும். உயிருக்குப் போராடுவோரை, காயம் பட்டோரை அவசர சிகிச்சையளிக்கவும். நடவடிக்கை எடுப்பதாக அறிகிறோம்.
திட்டமிட்ட நடவடிக்கைகளை உளவுத்துறை, பாதுகாப்புத் துறை அறிந்திருக்கவில்லையா என்பது முக்கிய கேள்வியாகவிருக்கிறது. பாதுகாப்புத் துறையின் பலவீனத்தையோ அல்லது தெரிந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் விடப்பட்டதா என்பதும் ஆராயப்பட வேண்டும். அரசு நாட்டு மக்களுக்கு உன்மையை அறிவிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் அவசரகாலச் சட்டம் பிரகடனப் படுத்திய காலங்களில் பாதுகாவலர்களே அத்துமீறிய சம்பவங்களையும் சுட்டிக்காட்ட வேண்டும். மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையிலான ,இனவாத, மதவாத வன்முறை நடவடிக்கைகளை அரசும், சர்வதேச சமூகமும் தடுத்து நிறுத்த வேண்டும்.
உயிர்களைப் பலி கொடுத்த குடும்பங்களுக்கும், காயங்களால் பாதிக்கப்பட்டோருக்கும், உயிரிழப்புக்களை சந்தித்தோருக்கும் அஞ்சலியையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம். என்றுள்ளது.
0 comments:
Post a Comment