5 பேர் இறப்புக்கு வெண்டிலேட்டர் செயல்பாடு காரணம் அல்ல - டீன் விளக்கம்

அரசினர் ராஜாஜி மருத்துவமனையின் புதிய விரிவாக்க கட்டிடத்தில் தலைக்காய சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு கடந்த 7-ந் தேதி இரவு 15 படுக்கைகளிலும் நோயாளிகள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் அன்று மாலை கடும் இடியுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்றுக்கு மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் மதுரை ஆஸ்பத்திரியில் மாலை 6.20 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. ஆஸ்பத்திரி முழுவதும் இருளில் மூழ்கியது.

ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஜெனரேட்டரை இயக்க முயன்றனர். அது கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் இயங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

அப்போது அங்கு சிகிச்சை பெற்ற பூஞ்சுத்தியைச் சேர்ந்த மல்லிகா (வயது 55), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (60), விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) ஆகிய 3 பேரும் செயற்கை சுவாசம் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செல்லூர் மீனாம்பாள்புரம் செல்லத்தாய் (வயது 55), பல்லடம் ஆறுமுகம் (48) ஆகியோரும் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

இதனால் உறவினர்கள் ஆஸ்பத்திரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் உதவி கமி‌ஷனர் சசிமோகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே 5 பேரும் உயிரிழந்தனர் என்று புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தியும், விளக்கம் அளிக்கவும், சுகாதாரத்துறை, மதுரை ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உத்தரவிடட்டது.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறியதாவது:-

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் மின்தடை காரணமாக 5 பேர் இறந்ததாக கூறப்படுவது உண்மை அல்ல. எந்த நிர்வாக அலட்சியமும் ஏற்படவில்லை.

ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்ட போதிலும் அங்குள்ள வெண்டிலேட்டர் கருவிகள், பேட்டரியின் உதவியுடன் இயக்கப்பட்டன. 2 மணி நேரம் வரை மின்தடை வந்தாலும் வெண்டிலேட்டர் இயங்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த பேட்டரிகள் உள்ளன.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். விரைவில் அறிக்கை அனுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment