தீ விபத்து - 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் தக்ஷீலா காம்ப்ளக்ஸ் என்ற 4 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பயிற்சி வகுப்பில் இருந்த 23 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர்.

கட்டிடத்தில் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்ததால் மாணவர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். சிலர் ஜன்னல் மீது அமர்ந்தபடி உதவி கேட்டு அலறினார்கள்.

தீ விபத்தின் போது கேதன் ஜோர்வத்யா என்ற வியாபாரி 8 மாணவர்களின் உயிரை காப்பாற்றினார். தீ விபத்து நடந்த கட்டிடம் அருகே கேதன் ஜோர்வத்யா வசித்து வருகிறார். அவர் தீ விபத்தை பற்றி அறிந்ததும் வீட்டில் இருந்து ஓடி சென்றார். கட்டிடத்தில் இருந்து மாணவர்கள் கீழே குதிப்பதை பார்த்தார். உடனே கேதன் ஏணி மூலம் ஏறி 2-வது மாடியின் பக்கவாட்டில் நின்று கொண்டார். ஜன்னல் வழியாக குதித்தும் மாணவிகளை பிடித்து பத்திரமாக நிற்க வைத்தார். பின்னர் அவர்களை ஏணி மூலம் கீழே இறக்கினார்.


இது போன்று அவர் 8 மாணவர்களின் உயிரை காப்பாற்றினார். தன் உயிரை பணயம் வைத்து 8 பேரை காப்பாற்றிய கேதன் ஜோர்வத்யாவுக்கு பாராட்டுகுவிகிறது.

இதுகுறித்து அவர் கூறும் போது, தீப்பிடித்து எரிவதை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுக்கவும், புகைப் படம் எடுக்கவும்தான் மும்முரமாக இருந்தனர். மாணவர்களிடம் தீயணைப்பு வீரர்கள் கீழே குதிக்க வேண்டாம் என்றும் நவீன ஏணி வரும்வரை காத்திருங்கள் என்றும் கூறினர்.

ஆனால் நவீன ஏணி வர தாமதம் ஆனது. உடனே நான் 2-வது மாடி பக்கவாட்டில் ஏறி நின்று மாணவர்களை காப்பாற்ற முடிவு செய்தேன். 8 மாணவர்களுக்கும் உதவி செய்து காப்பாற்றிய பிறகு சிறுமி ஒருவர் ஜன்னல் வழியாக கீழே குதிக்க முயன்றார். அவரிடம் காத்து இருக்குமாறு கூறினேன்.

ஆனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டாள் என்றார். கேதன் ஜோர்வத்யா பிளாஸ்டிக் பொருள் விற்பனை தொழில் செய்து வருகிறார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment