8 வழி சாலை திட்டம் மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்படும்

சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சிக்னல் வரை கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மேலும் முடிவுற்ற ரூ.450.77 கோடி திப்பிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-சேலம் மாநகரம் வளர்ந்து வருகிற மாநகரம், வளர்ந்து வருகிற இந்த மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. 

போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைப்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேலம் மாநகரம் முழுவதும் பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கி கடந்த 2016-ம் ஆண்டு இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை 2.5 கி.மீட்டர் வரை பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.

 1.03 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு வழி பாதையாகவும், 1.02 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு வழி பாதையாகவும் அம்மா அருளாசியுடன் இன்று இந்த பாலத்தை நான் திறந்து வைத்துள்ளேன். இதற்கு முன்பு திருவாக்கவுண்டனூர், ஏ.வி.ஆர். ரவுண்டானா, இரும்பாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
புதிதாக திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் வாகனங்கள் செல்லும் காட்சி.
அதேபோல் மேட்டூர் எல்லீஸ் கோர்ட்ஸ் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம், அங்கம சமுத்திரம் -நரசிங்கபுத்தில் 5.15 கோடியில் மேம்பாலம், தலைவாசல்- வசிஷ்ட நதியில் 6.2 கோடியில் மேம்பாலம், சேலம் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்காக ரெயில்வே கிராசிங்குகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மணல்மேடு பகுதியில் ரெயில்வே மேம்பாலம் ரூ.50.15 கோடியில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.83 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. நிலம் எடுக்கும் பணி முழுவதும் நிறைவுற்று விரைவில் மேம்பாலப் பணி முடிவடையும்.லீ பஜாரில் ரூ.46.35 கோடியில் மேம்பாலப்பணி தொடங்கப்பட்டது. 
தற்போது நிலம் எடுக்கும் பணி முடிவுற்று, பாலப்பணி மீண்டும் நடைபெற்று வருகிறது. அதுவும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்தாண்டுக்குள் அனைத்து பாலப்பணிகளும் நிறைவு பெறும்.தொளசம்பட்டி மேம்பாலம், கொங்கணாபுரம்- நரிமேடு மேம்பாலம், முத்து நாயக்கன் பட்டி மேம்பாலம், மகுடஞ்சாவடி-குமாரபாளையத்தில் இருந்து எடப்பாடி பிரிந்து செல்லும் கவனனேரி மேம்பாலம் உள்பட பல்வேறு மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மகுடஞ்சாவடி, அரியானூர், கந்தம்பட்டி, ஆத்தூர் வசிஷ்ட நதி, அயோத்தியாப்பட்டணம், தும்பல் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் தொடங்கப்பட உள்ளது.சேலம் மாவட்டத்தில் ரெயில்வே கிராசிங் உள்ள அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முத்துநாயக்கன்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் விரைவில் பாலப்பணிகள் தொடங்க உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.தற்போது மத்திய அரசு சேலத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளது. அதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணி தொடங்கப்படும். 

சேலம்- செங்கப்பள்ளி சாலை விரிவுபடுத்தப்படும்.சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட அனைத்து மாவட்டங்களும் தொழில் வளம் நிறைந்த பகுதியாகும். சென்னையில் இருந்து சேலம் வழியாக இந்த மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.தற்போது உள்ள தேசிய சாலைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் 300 சதவீதம் வாகனங்கள் தற்போது பெருகி உள்ளது. இதனால் உலக தரத்தில் நவீன சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.விபத்துகள் மூலம் உயிர் பலிகளை தடுக்க, சுற்று சூழலை பாதுகாக்க, தொழில் வளம் பெருக 8 வழி சாலை அவசியம். 

எனக்காக சாலை அமைக்கவில்லை. தற்போது சிலரின் எதிர்ப்பால் இந்த சாலை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மாநில அரசு மக்களிடம் எதையும் திணிக்காது, மக்களின் ஆதரவை பெற்று 8 வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும்.இந்த சாலையால் புதிய தொழிற்சாலைகள் வரும், இதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 

சேலத்தில் ராணுவ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலையை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதில் வேலைவாய்ப்பை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.மற்ற மாநிலங்களை விட தமிழகம் உட்கட்டமைப்பில் முதன்மை மாநிலமாக உள்ளது. சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment