நாடா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவுடன் மீண்டும் மைத்திரி முறுகல்

தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்பாகவும் தற்போது தெரிவுக்குழுவில் ஆராயப்படுவதால், அவரை சந்திந்துப் பேசுவதை தவிர்ப்பது நல்லதென தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, நேற்று இடம்பெற்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு முன்னரும் ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதியுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லதென பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தமையினால், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் நான்கு தடவைகள் கூடியுள்ளது.
இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி டி.ஐ.ஜி.சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளன.
இதன்போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானதுடன், ஜனாதிபதியின் கவனயீனம் காரணமாகவே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனும் கோணத்திலேயே பலர் சாட்சியமளித்திருந்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதும் உடனடியாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி கேட்டிருந்தார். அத்தோடு தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணிப்பேன் என கூறியதுடன், நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தையும் புறக்கணித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment