ஹசலக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்ததனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதற்காக தனக்கு நட்டஈடு பெற்றுத் தருமாறும் வேண்டி முஸ்லிம் பெண் ஒருவர் முன்வைத்திருந்த மனு விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை உயர் நீதிமன்றம் நேற்று (28) அறிவித்துள்ளது.
தான் கப்பலின் சுக்கானத்தை பதித்த ஆடையை அணிந்திருந்த வேளை, பௌத்தர்களின் புனித சின்னமான தர்ம சக்கரத்தை அணிந்ததாக தெரிவித்து, தன்னைப் பொலிஸார் கைது செய்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியதாக அப்பெண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பெண்ணின் மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புவனெக அலுவிஹாரை, பிரியந்த ஜயவர்தன, முர்து பிரணாந்து ஆகிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலொன்கொட, புதலுகஸ்யாய பிரதேசத்தில் வசிக்கும் அப்துல் ரஹீம் மஸீஹா எனும் பெண்ணே இந்த மனுவை முன்வைத்துள்ளார். பிரதிவாதிகளாக, சட்டமா அதிபர், ஹசலக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment