ஐந்தாம் ஆண்டு சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நாளை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய கடற்படை சார்பில் அந்தமான் நிகோபார் தீவில் சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் இந்திய தரைப்படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் உட்பட சுமார் 1000 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் நாளை நடக்கும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பங்கேற்க உள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமையகத்தின் தலைமை தளபதி, கடற்படை உதவி தலைவர் பிமல் வர்மா பங்கேற்கின்றனர். அதில், ஒருபகுதியாக பிற்பகலில் ராணுவ அதிகாரிகளுடன் சத்குரு கலந்துரையாடுகிறார். மேலும், மினி பே, ஹடூ, பிர்ச்குஞ்ச் ஆகிய இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதுதொடர்பாக, ஜக்கி வாசுதேவ் கூறுகையில், அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் மிகவும் தனிமையான மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலப்பகுதிகளில் ஒன்றாகும். நாட்டின் இறையாண்மையைக் காக்க ராணுவத்தின் முப்படைகளின் முயற்சி உண்மையிலேயே விலைமதிப்பற்றது. இந்த வீரர்களை உயர்ந்த யோகக் கருவிகளுடன் ஆயத்தம் செய்வது மிக முக்கியமானது என தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் சர்வதேச யோகா தினத்திற்கான கருப்பொருளாக, பாதுகாப்புப் படையினருக்கான யோகா பயிற்சிகளை ஈஷா அறக்கட்டளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment