தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய மத்திய அரசு-ஓ.என்.ஜி.சி. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதில், ஓஎன்ஜிசி நிறுவனம் 67 இடங்களிலும், வேதாந்தா நிறுவனம் 274 இடங்களிலும், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றன.
வேதாந்தா நிறுவனம் அடிப்படை பணிகளை ஏற்கனவே முடித்து விட்டது. ஆனால், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் சார்பில் தீவிரப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூன் 23ம் தேதி அதிமுக, பாஜ தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 600 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 லட்சம் பேர் கலந்து கொண்ட மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, நாகப்பட்டினத்தில் 15, திருவாரூரில் 59, தஞ்சாவூரில் 17, அரியலூரில் 3, ராமநாதபுரத்தில் 3 மற்றும் கடலூரில் 7 கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறைக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தொழிலக திட்டம்-2 செயலருக்கு கடந்த ஜூன் 18ம் தேதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ‘நாட்டின் 82 சதவீத பெட்ரோலிய மூலப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
வரும் 2022ம் ஆண்டுக்குள் பெட்ரோலிய மூலப் பொருட்கள் இறக்குமதியை 10 சதவீதம் அளவிற்கு குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அதனால், மேலும் 104 இடங்களில் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுசூழல் அனுமதி அளிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று காலை தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னிலையில் தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க துறை அதிகாரிகள்-ஓ.என்.ஜி.சி. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுடன் மத்திய பெட்ரோலியத்துறை மற்றொரு ஒப்பந்தத்திற்கும் கைகயெழுத்திட்டுள்ளது. இதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஒரு இடம், திருவாரூரில் நல்லினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி நடைபெறலாம் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment