ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமைதி திரும்பவும், இன பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணவும் மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் போர் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வுகாண வாய்ப்பை மத்திய அரசு வழங்கியது.
அனைத்து கட்சிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி, 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட அதிகாரப் பகிர்வுக்கான உறுதியான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்து இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் ஆகிய விருப்பங்களை தீர்க்கும் வகையில், ஒரு தீர்விற்கும், தேசிய சமரசத்துக்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் இலங்கை அரசினையும், அரசியல் கட்சிகளிடமும் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment