யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும் 5ஜி அலைவரிசை திட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபையின் முதல்வர் அலுவலகத்திற்கு எதிரில் இன்று (வியாழக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ‘5ஜியை இரகசியமாக செயற்படுத்துவதன் மர்மம் என்ன?’, ‘அறிவியல் எனக்கூறி ஆபத்தை விதைக்காதே’ போன்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள், 5ஜி அலைவரிசைக்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
யாழ்.மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, 5ஜி அலைவரிசை கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
பொதுமக்களுக்கு 5ஜி அலைவரிசை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை என்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு 5ஜி அலைவரிசை கோபுரம் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 2 மணித்தியாலயங்கள் இந்த போராட்டம் தொடர்ந்ததுடன், இந்தப் போராட்டத்திற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் சமூகம் அளித்திருந்தனர்.
எனினும் போராட்டத்தில் அரசியல்வாதிகளை கலந்துகொள்ள வேண்டாமென பொதுமக்கள் தெரிவித்ததுடன், அலைவரிசை கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தாவிடின், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
அத்துடன், யாழ். முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தம்மை சந்திக்க வேண்டுமென்றும் இந்த திட்டம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க விரும்புவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனினும் யாழ்.முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அலுவலகத்திலிருந்து வெளியேறி போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடவில்லை.
இதேவேளை யாழ்.மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்தமையினால், சபை அமர்வுகள் முடக்கப்பட்டுள்ளன.
யாழ்.மாநகர சபையின் அமர்வு இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொதுமக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சபை அமர்வுகள் முடக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment