சைவ ஆலயங்களில் மிருகங்களை பலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேன்முறையீட்டாளரான கவுணவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன.
இவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
0 comments:
Post a Comment