மதுரை – திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை, கணவர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகில் உள்ள சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரதிதேவி. பட்டதாரி ஆசிரியரான இவர், திருமங்கலத்தில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
திருமணமாகி இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், கணவர் குரு முனீஸ்வரன் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் ரதிதேவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்பு ரதிதேவியின் வீட்டிற்கு சென்ற குரு முனீஸ்வரன், சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். ரதிதேவி வர மறுத்துள்ளார்.
அந்த ஆத்திரத்தில் இன்று பிற்பகல், பள்ளிக்கு சென்ற குருமுனீஸ்வரன், மனைவியிடம் வீட்டு சாவி வாங்க வேண்டும் என கூறி பள்ளிக்குள் சென்றுள்ளார்.
3-வது மாடியில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ரதிதேவியை சந்தித்து வகுப்பறையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹெல்மெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரதிதேவியை சரமாரியாக குத்தியுள்ளார் குருமுனீஸ்வரன்.
ரத்த வெள்ளத்தில் விழுந்த ரதிதேவி அங்கேயே உயிரிழந்துள்ளார். சத்தம்போட்ட மாணவர்களைக் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு குருமுனீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பள்ளியின் வாசலில் இருந்தவர்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் குருமுனீஸ்வரனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment