ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த மஹிந்த விரும்புகின்றார் – பெரமுன குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தவே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய விருப்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கருத்து தொடர்பாக நேற்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “மாகாணசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறுகிறார். அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியது என்னவென்றால், அவர் இந்த நாட்டில் ஒரு ‘சிறிய பொய்காரர்’. அவரால் அதைச் செய்ய முடியாது. ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த அவர் உதவுகின்றார்” என குற்றம் சாட்டினார்.
இதேவேளை அங்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் “மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை அந்த அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. எனவே மாகாணசபைத் தேர்தலை நடத்த சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை” என கூறினார்.
பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இருந்து ஜனாதிபதி ஒரு கருத்தைப் பெற்றால், ஒக்டோபருக்குள் மாகாண சபை தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அண்மையில் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் முறை மாற்றம் செய்யப்பட்டு தற்போது இலங்கையில் கலப்பு தேர்தல் முறை நடைமுறையில் இருக்கின்றது. குறித்த புதிய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு மாகாண எல்லை நிர்ணய செயற்பாடுகள் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.
எனவேதான், மாகாண சபை தேர்தலை விகிதாசார தேர்தல் முறையில் நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி பெற்றுக் கொள்வாராயின் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைப்பதற்கு இருக்கக் கூடிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருவதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்ற நிலையில் மஹிந்தவின் மாகாண சபை தொடர்பான கருத்து ஜனாதிபதி தேர்தலை பின்நகர்த்துவதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது என்ற அடிப்படையில் பொதுஜன பெருமுன கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment