நாட்டில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மரண தண்டனைக்கு நாம் கொள்கையளவில் எதிரானவர்களாக இருந்தாலும் தற்போதைய நிலையில் இது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொரளையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மரண தண்டனையை நாட்டின் சட்டப் புத்தகத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கு யோசனைகளை முன்வைக்கப் போவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் யோசனையின் மூலம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியாது. அவ்வாறு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால் சட்டமா அதிபரினால் தயாரிக்கப்பட்ட ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு கிடைக்கும் ஆலோசனை அமைச்சரவை அங்கீகாரத்துடன் நீதிமன்றில் வழங்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றில் அதனை நிறைவேற்றுவதன் மூலமே அதில் திருத்தத்தினை கொண்டுவர முடியும்.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிலரின் குற்றங்களை நிரூபிக்க முடியாதுள்ளது. இந்த விடயத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் அறிக்கை முழுமையற்றது என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக பிரதமர் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீதித்துறைக்கு எதிராக இப்படி பேசுவதற்கு பிரதமருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது” என அவர் கேள்வியெழுப்பினார்.
0 comments:
Post a Comment