பட்டதாரிகள் விடயத்தில் துரோகம் இழைக்கும் அரசு - முஹம்மட் ஜெஸீர்

வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் மனுக் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள  கல்முனை பிராந்திய  அலுவலகத்திற்கு சென்ற அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் முஹம்மட் ஜெஸீர் இன்று மனுவைக் கையளித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஒன்றிய தலைவர் முஹம்மட் ஜெஸீர் ,

பட்டதாரிகள் விடயத்தில் அரசு பாரிய துரோகத்தைச் செய்துள்ளது. இந்த அநீதிக்கு நியாயம் கோரி மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தற்போது மனு ஒன்றைக் கையளித்துள்ளோம்.

கடந்த கால அரசாங்கங்கள் 70 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான வேலைவாய்ப்புகளை உள்வாரி, வெளிவாரி என்ற பிரிவினை இன்றி வழங்கியுள்ளது. அந்த கால அரசில் இல்லாத சிக்கல்கள் தற்போதைய அரச நியமனங்களில் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பட்டச் சான்றிதழை உடைய உள்வாரி வெளிவாரி வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் கடந்த கால அரசினால் வேலைவாய்ப்பை பெற்றனர்.

எனினும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் இன்று இந்த அரசு என்ன செய்கின்றது. உள்வாரி பட்டதாரிகளை மாத்திரமே உள்வாங்கி வெளிவாரி பட்டதாரிகளை நிராகரித்துள்ளது. வெளிவாரி பட்டதாரிகளுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அநீதியை ஏற்படுத்திய இந்த அரசின் எதிர்கால இருப்பை  தீர்மானிக்கும் சக்தி இந்த பட்டதாரிகள் என்பதை பிரதமர்-ஜனாதிபதி விளங்கி கொள்ள வேண்டும். நிச்சயமாக எமது உரிமை மறுக்கப்பட்டால் எதிர்காலத் தேர்தலில் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் சிந்திக்க வேண்டி ஏற்படும்.

அம்பாறையில் 3 ஆயிரம் வேலையற்ற  பட்டதாரிகள் உள்ளனர். இதில் தற்போது உள்வாரி வேலையற்ற பட்டதாரிகள் 700 க்கு குறைவானோரே இந்த வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர். வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29  30ஆம் திகதிகளில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல்கள் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பட்டியலில் வெளிவாரிப் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த எந்தவொரு பட்டதாரிகளும் உள்வாங்கப்படவில்லை என பட்டியல்கள் மூலம் கண்டறியப்படுவதாக   சுட்டிக்காட்டுறது.

தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் அண்மையில் மாகாண சபைகளில் நியமனம் வழங்கப்பட்ட சிலரின் பெயர்களும் உள்ளடங்குவதாகவும் இதன் காரணமாக புறக்கணிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த பட்டதாரி நியமனத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற வெளிவாரிப்பட்டதாரிகள் எவரும் உள்வாங்கப்படவில்லை என்று வெளிவாரி பட்டதாரிகள் கவலையுடன் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சகல பட்டதாரிகளையும் வேற்றுமையில்லாத முறையில் கணித்து தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை  இந்த அரசு  உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர். -என்றார்.






Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment