நடுக்கடலில் மாயமான பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் இருவர் நான்கு நாட்களுக்கு பின்னர் சக மீனவர்களால் மீட்கப்பட்டனர். இந்நிலையில் எஞ்சிய மீனவர்களையும் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த 4ஆம் திகதி கடலில் ஏற்பட்ட சூறைகாற்று காரணமாக நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாட்டு படகு மூழ்கியது. படகில் மீன்பிடிக்க சென்ற ஸ்டிபன், அந்தோனி, வின்சன்ட், சின்தாஸ் ஆகிய நான்கு மீனவர்களும் மாயமாகினர்.
அவர்களை கடந்த நான்கு நாட்களாக சக மீனவர்கள, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை ஆகியன தீவிரமாக தேடி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தையும், தேடுதல் பணி குறித்தும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது புதுக்கோட்டை மாவட்டம்- ஜெகதாபட்டிணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 9 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் ஸ்டிபன் மற்றும் அந்தோனி ஆகிய இரண்டு மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளித்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக மீன் பிடித்து திரும்பி வந்த ஜெகதாபட்டிணம் மீனவர்கள், ஆபத்தான நிலையிலிருந்த இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்ததுடன் அரச வைத்தியசாலையிலும்அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் எஞ்சியுள்ள இரண்டு மீனவர்களையும் மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காணாமல் போன ஏனைய மீனவர்கள் குறித்த தகவல்கள் இன்றும் வெளியாகவில்லை. தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment