கருத்தடை விவகாரம் ; மருத்துவர் ஷாபிக்குப் பிணை

குருணாகல் போதனா மருத்துவமனை மகப்பேற்று மருத்துவர் சேகு சிஹாப்தீன் ஷாபி இரு மாதங்களின் பின்னர் நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்டடார்.

குருணாகல் நீதிமன்ற நீதிவான் சம்பத் ஹேவாவசத்தால் இரண்டரை இலட்சம் ரூபா காசுப் பிணையிலும், 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு ஆள் பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த 
குறித்த மருத்துவர் நேற்று குருணாகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு எதிரான கோஷ்டியினர் பெருமளவில் குழுமியிருந்தனர். 

குருணாகல் நகரிலும் அவருக்குப் பிணை வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்திலும் குருணாகல் நகரிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

 மாலை 5.45 மணிக்குப் பிணை தொடர்பான முடிவை நீதிவான் அறிவிப்பதாகவிருந்தது. ஆனால், அது ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானது.

மருத்துவர் ஷாபியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் பிணை கோரி நின்றபோதும் எதிராளிகள் சார்பில் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஷாபியை பிணையில் விடுவிக்க அரச சட்டவாதிகள் எதிர்ப்பை வெளியிடவில்லை.

பயங்கரவாதக் குழுவிடம் பணம் பெற்று அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை, அந்த நிதியூடாக சொத்துக்களைக் கொள்வனவு செய்தமை, சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் மே மாதம் 24ஆம் திகதி இரவு மருத்துவர் ஷாபி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் தனித்தனியாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும், குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாமையால் மருத்துவர் ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்டார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment