விக்கி மற்றும் ஐங்கரநேசனை கடுமையாக சாடிய தவராசா

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலந்த விவகாரத்தில் நொதேன் பவர் நிறுவனத்தைக் காப்பாற்றிய முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர், மக்களிடம் இனி எந்த முகத்துடன் போகப்போகின்றார்கள். அப் பகுதி மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்தமை, நீதிமன்றத் தீர்ப்பு ஊடாக உறுதியாகியுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

சுன்னாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் பரவுவதற்கு நொதேன் பவர் நிறுவனமே காரணம். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக 2 கோடி ரூபா வழங்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 

இது தொடர்பில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போதே தவராசா இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கவில்லை என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். அவர் மூடி மறைத்த விடயங்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஊடாக அம்பலமாகியுள்ளன. இந்த விவகாரத்தில் நான் வேண்டுமென்று ஊழல் புரிந்தேன் என்று யாராவது கூறினால் வழக்குத் தாக்கல் செய்வேன் என்று மற்றொருவர் கூறினார். 

அவர் தனது அதிகாரத்துக்கு உட்படாத விடயத்தில் முண்டியடித்து மூக்கை நுழைத்து போலி அறிக்கைகள் விடுத்து மக்களை அடகு வைத்தமையும் தற்போது நிரூபிக்கப்பட்டு விட்டது. அந்தப் பகுதி மக்களை இவர்கள் எந்த முகத்துடன் சென்று பார்ப்பார்கள்?

சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமைக்கு எதிராகப் போராடினார்கள். போராட்டத்தை முடக்குவதற்காக விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் இணைந்து ஆய்வு செய்வதாகக் கூறிப் பெருமளவு நிதியை வீணாக்கினார்கள்.

வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை அழைத்து வந்துள்ளோம் என்றெல்லாம் படம் காட்டினார்கள். இவர்களின் அறிக்கைகள் எல்லாம் பொய் என்று பலமுறை அப்போதே எடுத்துரைத்தேன். அவர்கள் அதனை ஏற்கவில்லை. சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் மாசுக்கள், ஆபத்தான உலோகங்கள் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை பொய்யானது. அந்த அறிக்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்று மாகாணசபையில் நான் திரும்பத் திரும்பக் கத்தினேன். நான் சொல்வதை அவர்கள் மறுதலித்து வந்தார்கள்.

தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக நடந்தது என்ன என்ற உண்மை வெளிவந்திருக்கின்றது. இவர்கள் இருவரினதும் மோசடிகள் தொடர்பில், அவர்கள் இருவருக்கும் எதிராக தனியாக வழக்குத் தாக்கல் செய்யவேண்டும். மோசடி ஆய்வுகளுக்கு செலவிட்ட பணத்தை அவர்களிடமிருந்து அறவிடவேண்டும்  என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment