அம்பாறை - நிந்தவூர் பகுதி வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு உருண்டைகள் பொருத்தப்பட்ட தகடுகள் உள்ளிட்ட பல பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை – நிலாவெளி - இரக்ககண்டி பகுதியில் கடற்படையினரால் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
உந்துருளியில் பயணித்த ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த வெடிப்பொருள்கள் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதன்போது 8 ஜெலட் நைட் குச்சிகள், 160 டெடனேட்டர்கள் மற்றும் திரி நூல் என்பன மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கமைய, அப் பகுதியிலுள்ள கடற்பிராந்தியத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நவடிக்கையின் போது 43 ஜெலனட்நைட் குச்சிகள் மற்றும் 55 டெடனேட்டர்கள் என்பனவும் மீட்கப்பட்டன.
இதேவேளை, மாத்தளை – கோபிலிவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 9 மில்லி மீற்றர் ரகத்தை சேர்ந்த 7 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகாமையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இந்தத் தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் தரப்புத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 49 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா நகரில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது இந்த பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பள்ளிவாசலில் உள்ள களஞ்சியசாலையில் இருந்தே குறித்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் நாளைய தினம் ஹற்றன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
0 comments:
Post a Comment