ஒரே குடும்ப அட்டை முறைமைக்கு வைகோ கண்டனம்

நாடு முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறையை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக  மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறிய கருத்துக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வைகோ இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்து மாநிலங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சனாதன சக்திகள் தங்கள் கொள்கையாக கொண்டிருக்கின்றன.
ஆகையால்தான் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்த பா.ஜ.க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு ஒரே தேர்தல், ஒரே தேசிய கல்விக் கொள்கை, ஒரே சுகாதாரக் கொள்கை என்பதில் தொடங்கி  நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் பொதுவிநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது.
ஆகையால் அதனைச் சீர்குலைக்கவும், வடக்கு இந்தியாவிலிருந்து புலம்பெயரும் மக்களை ஊக்குவித்துத் தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றவும், ஏழை – எளிய சாதாரண தொழிலாளர்களுக்கு பொது விநியோக முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியே பா.ஜ.க.ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
ஆனால் இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை. ஆகையால் பொது விநியோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் ஊடாக இந்தியா முழுவதும் உணவுப் பழக்க வழக்கங்களை ஒரே முறையில் மாற்ற வேண்டும் என்கின்ற மத்திய அரசின் செயற்பாடு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகையாலேயே ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment