‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை

‛தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பதன் மூலம், தங்கத்தில் தாலி அணியும் நடுத்தர வர்க்க பெண்களுக்கு, அது பெரும் கனவாகி விடும்' என தி.மு.க., கவலை தெரிவித்துள்ளது.


லோக்சபாவில், நேற்று(ஜூலை 18) நிதி மசோதா மீது, தென் சென்னை, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் முதன் முதலில் பேசியதாவது: ஜனாதிபதி உரையாகட்டும், பிரதமரின் உரையாகட்டும், நிதியமைச்சரின் பட்ஜெட் உரையாகட்டும், எல்லாவற்றிலும் ஏகப்பட்ட வாக்குறுதிகள். இவற்றை ஒட்டு மொத்தமாக பார்த்தால்,வெறும் கானல் நீராகவே தெரிகின்றன.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது, நடுத்தர வர்க்க பெண்களை நேரடியாகவே பாதிக்கும். தங்கத்தில் தாலி அணிய வேண்டும் என்ற அவர்களது விருப்பம், இனி கனவாகவே முடியும். பெண்கள், குழந்தைகள், ஏழைகள் ஆகியோரின் நலன்களை அடிப்படையாக வைத்தே, நாட்டின் தலைவிதி நிர்ணியிக்கப்படும். ஆனால், நிஜத்தில், மத்திய அரசை எதிர்க்கும் சாமானியர்கள், எரிக்கப்படுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை, கூட்டாட்சித் தத்துவம், மாநில நலன்கள், மதசார்பின்மை என அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என, உருமாறி வருகிறது

இந்தியாவின் ஆன்மா, கிராமங்களில்தான் வாழ்கிறது என்றார் காந்தி. ஆனால், விவசாயிகளுக்கு வெறும், 6 ஆயிரம் ரூபாயை வழங்கினால் போதுமா? தமிழக மக்கள், கஜா புயலில் பாதிக்கப்பட்டு நிர்கதியாக நின்றபோது, பிரதமர் மோடி வந்து பார்க்க மாட்டாரா என, ஏங்கினர். ஆனால், கடைசி வரை அவர் எட்டிப்பார்க்கவில்லை. ஹிந்தி பேசாத மாநிலங்களில், ஹிந்தி மொழியை வளர்ப்பதற்காக, ஆசிரியர்களை நியமிக்க, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மும்மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. இதை ஏற்க முடியாது. இவ்வாறு, தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment