ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச வரவேண்டும் என்ற கருத்து தெளிவாக எடுத்துக் கூறப்பட்டதாகவும், அதற்கு எந்தவொரு தரப்பினரும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லையெனவும் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சற்றுமுன்னர் அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்துடன் உள்ள சகல கட்சிகளினதும் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (22) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்துகொண்டவன் என்ற வகையில், இவ்வாறு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எந்தவித எதிர்ப்பும் எழவில்லையெனவும் அவர் கூறினார்.
இந்தப் பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும், கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவாக அறிவித்ததாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment